நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
09/04/2025
மகத்தான ஆன்மீகப் புரட்சியாளர் அருட்பிதா யோசப் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கான மதிப்பளிப்பு!
தமிழீழ தேசத்தின் விடுதலையைத் தணியாத இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு நீண்ட பல தசாப்தங்கள் உழைத்த உன்னதமான மனிதர் ஒருவரை, இன்று நாம் இழந்துவிட்டோம். ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட உலக மக்களின் விடுதலைக்காகவும் வீச்சோடு பயணித்த, ஓர் ஆன்மீகப் புயல் இன்று ஓய்ந்துவிட்டது. ஈவிரக்கமற்ற இயற்கையின் பசிக்கு, மற்றுமொரு தமிழினப் பற்றாளர் இரையாகி விட்டார். அந்த அற்புதமான இலட்சிய மனிதர் ஆன்மீகப் புரட்சியாளர் அருட்பிதா யோசப் பிரான்சிஸ் சேவியர் அவர்களை இழந்து, தமிழர் வாழும் தேசமெல்லாம், இன்று ஆறாத்துயரில் மூழ்கிக் கிடக்கின்றது.
அருட்பிதா யோசப் பிரான்சிஸ் சேவியர் அவர்கள், சுயநலங்களுக்கு அப்பாற்பட்ட, ஒரு உயர்ந்த மனிதர்; அசாத்திய குண இயல்புகள் கொண்டவர்; இரக்ககுணம் நிறைந்ததோர் இனிய மனிதர்; அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும், மனிதாபிமானத்தோடும் நடந்து கொண்டவர்; அனைவரையும் கவர்ந்து கொண்ட, புரட்சிகரமான எண்ணங்கொண்ட ஆன்மீக, சமூகச் செயற்பாட்டாளர் இவர். எமது தாய்மொழி தமிழுக்காக, ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காக அரும் பணியாற்றி, தமிழர் வரலாற்றில் அழியாத் தடம் பதித்த, சுவாமி ஞானப்பிரகாசர், தவத்திரு தனிநாயகம் அடிகளார் போன்றோரின் வரிசையில், இந்த உன்னதமான ஆன்மீக, சமூகப் புரட்சியாளர் யோசப் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் அவர்களும் இணைந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால், வாழும் காலத்தில் கௌரவிக்கப்பட்ட விதிவிலக்கான உன்னத மனிதர்களில், இவரும் ஒருவராக இருந்திருக்கின்றார் என்றால், இவருடைய விடுதலை வேட்கை எத்தகைய வீரியம் வாய்ந்தது என்பதை, நீங்கள் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
சேவியர் அடிகளார் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்குக் கிடைத்த உன்னதமானதோர் மனிதர். ஆன்மீகத்தினூடாக, இன விடுதலைப் பணியாற்றிய அரிய பொக்கிசங்களில் இவரும் ஒருவர். ஒடுக்கப்பட்ட எமது இனத்தின், விடிவுக்காக இவர் இறுதிவரை ஆற்றிய அரும்பணிகள் மகத்துவம் வாய்ந்தவை. தேசியத் தலைவரின் பணிப்பின் நிமித்தம் அன்பு, காருண்யம் சகோதரத்துவப் பண்பு, விடுதலைப் பணி போன்ற சீலங்களை, அவர் பல நாடுகளுக்குப் பயணம் செய்து பரப்புரை செய்தார். சுதந்திரம், விடுதலை, சமத்துவம் போன்ற உயரிய மனித விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அனைத்து மனிதப் பிறவிகளும், இந்த ஆன்மீகப் புரட்சியாளரின் உன்னதமான வாழ்வையும், அவரது உயரிய சிந்தனைகளையும் என்றென்றும் நெஞ்சில் நிறுத்தி வணங்குவார்கள் என்பது திண்ணம்.
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாமனிதர் அன்ரன் சின்னராசா பிலிப் அவர்களோடு இணைந்து, இலங்கையில் நடந்தது “இனவொழிப்பு” என்பதை, தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளின் ஆட்சிப் பீடங்களில் எல்லாம் உணர வைக்க வேண்டும் என்பதற்காக, அயராது உழைத்த உரிமைக் குரலோன் தான் இத்தக் “குட்டி சேவியர்” என அன்பாக அழைக்கப்படும் புரட்சியாளர். இவர் தனது வாழ்நாளில் எதனைச் செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்தாரோ அந்தப் பணி எங்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அந்த ஆன்மீகப் புரட்சியாளர் விட்டுச் சென்ற பணிகளை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து முன்னெடுத்து, அவற்றை நிறைவேற்றி வைப்பதே, நாம் அவருக்குச் செலுத்துகின்ற இதயபூர்வமான அஞ்சலியாக இருக்கமுடியும்.
சேவியர் அடிகளார் அவர்களின் இழப்பால் மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் புலம்பெயர் நட்புறவுகள் அனைவரோடும், தமிழீழ அரசியல்துறை, தமிழீழ மக்களோடு இணைந்து இத்துயரில் பங்கெடுத்துக் கொள்கின்றது. அருட்பிதா யோசப் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் இனப்பற்றிற்கும், விடுதலை வேட்கையையும், அவரது விடுதலைப் பணியையும், கௌரவிக்கும் முகமாக, அவருக்கு “மாமனிதர்” என்ற அதி உயர் தேசிய விருதினை, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி, இந்தச் சமூக, ஆன்மீகப் புரட்சியாளருக்கு, வழங்கி மதிப்பளிப்பதில், தமிழீழ அரசியல்துறையினராகிய நாங்கள் பெருமை அடைகின்றோம். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த, உன்னத மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Add comment