இலங்கையின் சுதந்திர தினமாம் பெப்ரவரி ௦4, ஒன்றுபட்ட இலங்கை மக்களின் 77வது சுதந்திர தினமாம். ஆடிப்பாடி ஆனந்த கொண்டாட்டமாம். அனுர அரசின் முதலாவது சுதந்திர தினமாம்!
நம்பமுடிகிறதா? நாம்பட்ட இரத்த சுவடுகள் இன்னும் காயவில்லை. ஒன்றுபட்ட இலங்கையி்ல் ஓரினத்தை தமிழரை அழிக்க தலைவிரித்தாடிய இனப்படுகொலைகள்
எண்ணிலடங்கா பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் வயோதிபர்வரை எத்தனை பேரை இலங்கையரசு இனவெறிக்கு பலியாக்கியது.
அடக்கு முறைகள் அன்றுதொடக்கம் இன்றுவரை கல்வியில் தரப்படுத்துதல், தொல்லியல் வரலாற்றில் பௌத்தமயம், நிலஅபகரிப்பு , நீதியற்ற விசாரணைகள் எத்தனை சொல்லலாம் இரத்தம் துடிக்கிறது. எமக்காக தம் உயிா்களை ஈகம்செய்து இம்மண்ணிலே விதையான மாவீரர்களை ஒரேஒரு கணம் கண் மூடி நினையுங்கள்.
போதும், நம் கண் முன்னே உறவாடி மகிழ்ந்த உயிரான ஒருவன்/ஒருத்தி மண்ணுள் விதையென!
சுதந்திரம் எமக்கு தந்தென்ன துயரைத் தவிர வேறு இல்லை. அடிமையாய் ஆக்கிரமிப்பாளன் காலடியில் மண்டியிட்டு வீரத் தமிழர் என்பதை மறந்து வாழ்ந்த காலமதில் உதயசூரியனாய் எமை மீட்டெடுக்கும் தாயுமானவனாய் வந்த எம் தேசியத் தலைவர் வழியில் இணைந்து, போராடி உச்ச பயனை அடையும் வேளை “பாரத போரில் அபிமன்யூ வீழ்ந்தது போல” அத்தனை சர்வதேச அரசுகளின் சூழ்ச்சியில் மெளனிக்கப்பட்ட யுத்த வலியின் சாட்சிகளாய் புலம்பெயர் நாடுகளில் நாம்,
ஒன்றுபட்ட இலங்கையில் முப்படைகளின் துணை கொண்டு மூர்க்கமாய் அழித்தது மட்டுமன்றி ஒன்றுபட்ட இலங்கையாம் தமிழ்மக்கள் கவலையின்றி வாழ்கிறார்களாம்!
எப்படி சொல்வது கொத்துக் கொத்தாய் குண்டு வீசி முப்படை கொண்டு அழிக்கும் போது தோணலையா? ஒவ்வொரு இலங்கையரசின் தலைவர்களும் காலத்துக் காலம் ஒப்பந்தம் பேசி ஏமாற்றியதை மறப்போமா?
துன்பங்களில் சுழன்ற மக்கள் மாற்றம் வருமென நம்பி அனுரவிற்கு வாக்களித்து விரக்தியின் உச்சத்தில் இன்று எமக்கேது சுதந்திர தினம்? சுதந்திரம் எமக்கு எட்டாத தொலைவில்,
எமைப் பொருத்தவரை பெப்ரவரி 04 கரிநாள் கறுப்புடை தரித்து, கறுப்புக் கொடியுடன் உலகெங்கும் வாழும் தமிழர்கள் நம் எதிர்ப்பை காட்ட ஒற்றுமையுடன்
ஓரணியாய் கரிநாளை கடைப்பிடிப்போம் வாரீர்
Add comment