தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் ஒன்ராரியோ மாநில சட்டவரைபு 104 ற்கு எதிராக தமிழின அழிப்பாளர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டதை, கனடா உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஒன்ராரியோ மாநில சட்டவரைபான தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கான, தனிமனித சட்டவரைபு ஒன்ராரியோ மாநில அவை உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் முன்வைக்கப்பட்டு ஒன்ராரியோ மாநில அவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னணியில் பல ஒன்றாரியோ மாநில பல் இனத்தைச் சார்ந்த அமைச்சர்களும், தமிழ் அமைப்புக்கள், இளையோர் மற்றும் பல தேசிய செயற்பாட்டாளர்களும் ஒற்றுமையாக செயற்பட்டது இந்த வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது, இச்செயற்பாட்டிற்கு உழைத்த கனடாவாழ் தமிழர்கள் அனைவரையும் பாராட்டுவதுடன், அவர்களைப் போன்று மற்றைய நாடுகளிலும் முன்னெடுப்புக்களை செய்து இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழின துரோகிகளுக்கும் எதிரான செயற்பாடுகளை முன்னகர்த்த வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.
தமிழின அழிப்பு அறிவூட்டலுக்கான சட்டவரைபு 2019ஆம் ஆண்டு ஒன்ராரியோ மாநில அவை உறுப்பினர் திரு.விஜய் தணிகாசலம் அவர்களால், பல தமிழ் இன எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புக்களையும் கடந்து கொண்டுவரப்பட்டது.
ஒன்ராரியோ மாநில தமிழின அறிவூட்டல் சட்டவரைபு 104 கனடா மண்ணில் நிறைவேற உழைத்த ஒன்ராரியோ மாநில முதல்வர் டக் போட் மற்றும் ஏனைய ஒன்ராரியோ மாநில அவை உறுப்பினர்களுக்கும் மற்றும் தமிழினச் செயற்பாட்டாளர்களுக்கும் பாராட்டுக்கள்!
கனடாவில், இலங்கையில் நடந்த தமிழின அழிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்த சிங்கள அரசின் பின்னணியுடன், சிங்கள மக்களால் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் கனடா உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழின அழிப்பிற்கு பின்னால் செயற்பட்ட, செயற்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கு கிடைத்த பின்னடைவாகவே பார்க்கப்படுவதுடன் அவர்களுக்கு எதிரான ஒரு மைல் கல்லாகவும் பார்க்கப்படுகிறது.
பௌத்த மகாவம்ச மன அமைப்பில் உள்ள சிங்கள அரசும், பேரினவாத சிங்கள மக்களும் தொடர்ந்தும் தமிழருக்கான உரிமையை இன்றுவரை மறுத்து வருகின்றார்கள். பௌத்த மகாவம்ச மன அமைப்பில் உள்ள சிங்கள அரசு ஒரு போதும் தமிழருக்கான நியாயமான, நீதியான தீர்ப்புக்களை வழங்க போவதில்லை.
தமிழின அழிப்புக்கான நீதிக்கான அறிவியல் போர் உலகம் தழுவிய தமிழ்மக்களால் பல்வேறு வடிவில் முன்னெடுக்கப்படுகிறது. இந்த முன்னெடுப்புகள் வெற்றி பெற நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு, அதற்காக பாடுபட்டால் அதற்கான நியாயம் கிடைக்கும்.
Add comment