நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
15/06/2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த புரட்சிகரமான தமிழறிஞர் பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்களுக்கான மதிப்பளிப்பு !
மனித வாழ்வின் அதியுன்னதமான பண்பாகக் கருதப்படுவது, பெற்ற தாயையும், நாம் பிறந்த மண்ணையும், எமது உயிருக்கு நிகரான தாய்மொழி தமிழையும் பேணிப் பாதுகாத்துப் போற்றுவதாகும். இலங்கையில் பல அறிவியல் மேதைகளை உருவாக்கிய யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காட்லிக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றியதோடு, இலட்சிய வேட்கையோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழ்மொழிக்கும் அளப்பெரிய பணியாற்றிய புரட்சித் தமிழறிஞர், பண்டிதர். வீ. பரந்தாமன் அவர்களை கடந்த 14.06.2025 அன்று நாம் இழந்து விட்டோம். இவரது சாவு தமிழ்த் தேசிய நல்லுலகிற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
பண்டிதர் பரந்தாமன் அவர்கள் ஒரு விடுதலைப் பற்றாளர். தமிழினம் தன்னாட்சி உரிமைபெற வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர். தமிழர் தாயகம் விடுதலை பெற்று, இறையாட்சியுடைய சுதந்திர நாடாக உருவாக வேண்டுமென்பது அவரது பேரவா ஆகும். தமிழீழம் இவரது இலட்சியக் கனவாகும். அதனாலேயே, எமது விடுதலை இயக்கம் முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவருக்கு அலாதியான இலட்சியப் பிடிப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து, அதன் துணை வேலைத் திட்டங்களாகிய இணக்கசபை மற்றும் கல்வி வளர்ச்சிக்கழக வேலைத்திட்டங்களில், ஆரம்பத்தில் பங்கெடுத்து வந்த இவர், பின்னர் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற யாழ் இடப்பெயர்வுக்குப் பின்னர், தன்னைத் தீவிரமாக விடுதலைப் போராட்டத்தோடு இணைத்துக் கொண்டார்.
பொதுவாகவே இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால் துன்பங்கள் தெரிவதில்லை, வலிகள் தடுப்பதில்லை, ஆபத்துக்களைப் பொருட்படுத்துவதுமில்லை. இவர் போராட்ட வாழ்வில் பெரும் துயர்களையும், சுமைகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழீழ விடுதலைப் போருக்கு உரமூட்டும் வகையில், தனது மொழி வல்லமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அறிஞர்களில் இவரும் ஒருவர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தனது தூய தமிழ்மொழி வல்லமையால், ஆட்கொண்டதோர் அற்புதமான ஆழுமை இவராவார்.
மீளாத்துயில் கொண்ட பண்டிதர் ஐயா அவர்கள், தமிழ் மொழியில் ஆழமான புலமை பெற்றவர்; தமிழ் மொழியின் தனிச்சிறப்பை நன்கு உணர்ந்தவர்; தமிழைத் தெய்வமாகத் தொழுதவர்; இன்பத்தமிழில் இறையின்பம் காண்பவரிவர்; தமிழீழ அன்னை பெற்றெடுத்த ஓர் தலைசிறந்த படைப்பாளி இவராவார். பண்டிதர் ஐயா அவர்களின் தமிழ்ப் புலமையும், விடுதலைப் பற்றும் ஒன்றிணைந்து அவரது மரபுக் கவிதைகளுக்கு புதுப்பொலிவையும், செழுமையையும் கொடுத்திருக்கின்றன. மரபுக் கவிதைகள் அருகிவந்த போர்க் காலகட்டத்தில், இக் கவிதை வடிவத்திற்கு புத்துயிரூட்டிய பண்டிதர் ஐயா அவர்கள், அதில் தனது அனுபவத் தாக்கங்களை ஆழமாகப் பதிவு செய்துள்ளார். அவரது கவிதைகள் விடுதலைப் பற்றைப் பறைசாற்றி நின்றன. பண்டிதர் பரந்தாமன் அவர்களின் விடுதலை பற்று, அவரைத் தமிழீழத் தேசியத் தலைவரோடு இதயபூர்வமாக இணைத்து வைத்திருந்தது.
போர்க்காலத்தில் இவர் எழுதிய எழுச்சிமிகு கவிதைகள், புரட்சிப் பாடல்கள், போர்கால எழுத்துருவாக்கங்கள், அரங்காற்றுகைகள், மற்றும் இளம் போராளிகளுக்கும், மக்களுக்கும் தமிழமுதையூட்டி, தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பிய விந்தையை இவரோடு பழகிய அனைத்துப் போராளிகளாலும், மக்களாலும் இன்றும் நினைவு கூரப்பட்டுவருகின்றது. அவரது அரும்பணிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும்; தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக, தூய தமிழில் பெயர் சூட்டும் நடைமுறையை, தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் மாவீரர் தமிழேந்தி அவர்களோடு இணைந்து உருவாக்கிய, தமிழ்ப்பெயர்க் கையேடு (மக்கட்பெயர்கள் – 46,000) இவர் தமிழ்மொழி மீது கொண்ட அதீத பற்றின் உன்னத வெளிப்பாடாகும்.
அவரது படைப்புக்களில் தமிழ் இலக்கிய ஈடுபாடும், இலட்சியப் பணிவும், விடுதலை வேட்கையும் மேலோங்கி நின்று, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மேலும் செழுமைப்படுத்தியது என்றுரைத்தால் அது மிகையாகாது. கால நீரோட்டத்திற்கு ஏற்ப தனது படைப்புக்களை இவர் படைத்திருந்தார். அவரைப் போலவே அவரது படைப்புக்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவை. பண்டிதர் ஐயா அவர்கள், தனது படைப்புக்கள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கொதிப்புணர்வையும் கொழுந்துவிட்டு எரியவைத்தவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்னார் ஆற்றிய பெரும் பணிகள் மிகவும் போற்றுதற்குரியவை. அதனாலேயே வாழும் காலத்தில், தமிழீழத் தேசிய தலைவர் அவர்களால் மதிக்கப்பட்டதோர், உன்னதமான மனிதர் இவரென்பது தமிழின வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.
தனது இரண்டு மைந்தர்களை தமிழீழ தேச விடுதலைக்காக உவந்தளித்த பின்பும், தொடர்ச்சியாக தமிழினத்தின் விடிவுக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், இவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் மதிக்கத்தக்கவை. தன்னாட்சி உரிமைகோரும், எமது மக்களின் விடுதலைப் போராட்டம் நியாயமானது என்பதை நன்குணர்ந்து, தனது உடல்நலத்தைக் கூடப் பொருட்படுத்தாது, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 2009 க்கு பின்னர் சாத்தியமான வழிகளில் எமது மக்களின் உரிமைப் போருக்கு, தனது இறுதிமூச்சுவரை பெரும் பங்காற்றிய அவரின் சுதந்திர வேட்கையை அளவிட முடியாது.
அன்னாரின் இழப்பால் மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், ஊரவர், நண்பர்கள், தமிழ் மக்கள் அனைவரோடும், தமிழீழ அரசியல்துறையினராகிய நாமும் இணைந்து, எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கின்றோம். அவரது உறுதியான இனப்பற்று, மொழி ஆளுமை, விடுதலை வேட்கை என்பவற்றிற்கு மதிப்பளித்து, அவர் தமிழின விடுதலைக்கு ஆற்றிய அரும்பணிகளைக் கௌரவிக்கும் முகமாக, தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் என்ற விருதினை, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி, பண்டிதர். வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்களுக்கு வழங்கி மதிப்பளிப்பதில், தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் பெருமையடைகின்றோம். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உன்னத மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.
Add comment